குற்றம்

யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்தது மூன்றாவது வழக்கு

Sinekadhara

யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் மீது மூன்றாவது வழக்கு பாய்ந்தது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து இணையத்தில் அவதூறு பரப்பியதாக, கடந்த 11ஆம் தேதி வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் மீது கலகம் விளைவித்தல், அமைதியை சீர் குலைத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள துரைமுருகன், இந்த வழக்கிற்காக திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை, 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

ஏற்கெனவே, திருச்சி கே.கே.நகரில் வினோத் என்பவரது கடைக்குள் அத்துமீறி புகுந்து ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்ததாக, யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் மீது திருச்சி காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் சாட்டை துரைமுருகனுடன் சரவணன், சந்தோஷ், வினோத் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் 4 பேருக்கும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் மற்ற 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், சாட்டை துரைமுருகனால் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டது. காரணம், கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், 15 நாட்கள் சிறையில் அடைக்க கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது, மூன்றாவது வழக்கில் திருவிடைமருதூர் நீதிமன்றமும், சாட்டை துரைமுருகனை15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.