குற்றம்

6 மாதத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 3,804 வழக்குகள் பதிவு - குடிமைப்பொருள் சிஐடி

6 மாதத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 3,804 வழக்குகள் பதிவு - குடிமைப்பொருள் சிஐடி

Sinekadhara

கடந்த 6 மாதத்தில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 3,804 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

தமிழக மக்களுக்கு அரசால் இலவசமாக பொதுவிநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை கடத்தல், பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை இயக்குநர் ஆபாஸ்குமார் உத்தரவின்பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் பல குழுக்களாக பிரிந்து தமிழகம் முழுவதும் தீவிர தணிக்கை மற்றும் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டதில், கடந்த 6 மாத காலமாக, பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி பதுக்கி, கள்ளச்சந்தையில் அண்டை மாநிலங்களுக்கு வாகனங்களில் கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக 3,804 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2,628 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் தொடர்புடைய 631 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3,897 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மண்ணெண்ணெய் தொடர்பாக 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15,780 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 142 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கலப்பட டீசல் சம்பந்தமாக மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 3,24,246 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்த டீசல் ஏற்றி வந்த 39 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல் செயலில் ஈடுபட்ட 91 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு உருளைகள் தவறுதலாக வணிகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதாக மொத்தம் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 420 எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டு 345 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த 6 மாத காலத்தில் மட்டும் 46 முக்கிய குற்றவாளிகள் கள்ளச் சந்தை தடுப்பு காவல் சட்டம் 1980இன் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளை கள்ளச் சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் அடைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல், பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பணை செய்வோர்மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.