உத்தரபிரதேசத்தில் பணம் கட்ட முடியாததால் 3 வயது குழந்தைக்கு அறுவைசிகிச்சை முடிந்து தையல் போடாமல் மருத்துவமனை அனுப்பியதால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜ் நகரத்தில் யுனைடேட் மெடிசிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 3 வயது சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிறுமிக்கு அறுவைசிகிச்சை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படவே அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.
ஆனால் அறுவைசிகிச்சைக்கு ரூ.5 லட்சம் கட்டவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது. சிறுமியின் குடும்பத்தாரால் பணம் கட்டமுடியாததால், அறுவைசிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு தையல் போடாமல் மருத்துவமனையிலிருந்து அனுப்பியதால் குழந்தை இறந்துவிட்டது.
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் வழக்குப்பதிவு செய்ததால், இதுகுறித்து விசாரிக்க மாவட்ட மாஜிஸ்திரேட் இரண்டுபேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை துணை தலைவர் சாத்பால் குல்தானி, தையல் போட்டுத்தான் அனுப்பியதாகவும், வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அதை பிரித்திருக்கவேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.