குற்றம்

மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் - கோவையில் 3 ஆசிரியர்கள் கைது

மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் - கோவையில் 3 ஆசிரியர்கள் கைது

webteam

கோவையில் ஒரே நாளில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் தொல்லை கொடுத்த மூன்று ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 3 ஆசிரியர்கள் உட்பட 5 பேர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூரில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் சுகுணாபுரம் மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த உடற்கல்வி ஆசிரியர் உட்பட நேற்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த குற்றத்தில் மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுகுணாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் (58) மீது குற்றம்சாட்டி 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே மாணவிகள் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு ஆசிரியர் பிரபாகரன் மீது போக்சோ வழக்கு பதியபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பொள்ளாச்சி அடுத்துள்ள தொண்டாமுத்தூர் உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன், பாலசந்தர் இருவரையும், குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் கைது செய்து கோட்டூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் நேற்றிரவு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். மேலும் அதுமட்டுமின்றி மதுக்கரை, நெகமம் காவல் நிலையங்களில் இரண்டு போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒரே நாளில் போக்சோ வழக்கில் 3 ஆசிரியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.