Murder pt desk
குற்றம்

சென்னை: ஒரே நாள் இரவில் நிகழ்ந்த மூன்று கொலைகள் - கொலைக்களமாக மாறுகிறதா தாம்பரம்?

webteam

செய்தியாளர்: சாந்தகுமார்

தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லை பகுதியில் 21 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. தாம்பரம், பள்ளிகரணை என இரண்டாக பிரிக்கப்பட்டு இரண்டு துணை ஆணையர்கள் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தாம்பரம் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட தாம்பரம், குரோம்பேட்டை, குன்றத்தூர் காவல்நிலைய எல்லையில் நேற்றிரவு மட்டும் தலா ஒரு கொலை என மூன்று கொலைகள் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Murder

சம்பவம் 1

தாம்பரம் காவல்நிலைய எல்லையில் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுவதில் ஏற்பட்ட தகராறில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி கார்த்திக் ராஜா என்பவருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் நிர்வாகி ஆனந்த் என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பு “ஸ்டாண்ட் உறுப்பினராக இல்லாமல் இங்கு சவாரி எடுக்கக் கூடாது. இங்கு நாங்கள் மட்டும்தான் ஓட்ட வேண்டும்” என ஆட்டோ ஸ்டாண்ட் நிர்வாகி பேசியுள்ளனர். அதனை ஏற்றுக் கொள்ளாமல் “நான் இங்குதான் ஆட்டோ ஓட்டுவேன்” என கார்த்திக் ராஜா கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், அவரது நண்பர்கள் ஆறு பேருடன் சேர்ந்து நேற்றிரவு ஆட்டோவில் வந்து வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடி உள்ளனர். சம்பவ இடத்தில் தாம்பரம் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி ஆய்வு செய்து கொலையாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து தாம்பரம் உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தப்பியோடிவர்களை தேடி வருகின்றனர்.

Hospital

சம்பவம் 2

அதே போல் நேற்றிரவு குரோம்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருநீர்மலை சாலையில் தாமஸ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சபரி என்பவரிடம், அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் குறைந்த விலையில் டிவி, ஃபிரிட்ஜ் வாங்க ஆசைப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்ட சபரி, பொருட்களை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாமஸ், சபரியை திட்டியதோடு அவரது குடும்பத்தினரையும் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனை மனதில் வைத்துக் கொண்டு தாமஸை கொலை செய்ய திட்டமிட்ட சபரி, பணம் தருவதாக அழைத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாறியாக வெட்டிக் கொலை செய்து விட்டு குரோம்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Police

சம்பவம் 3

மற்றொரு கொலை, குன்றத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட செம்மரபாக்கம் ஏரி அருகே நடந்துள்ளது. அங்கு செங்கல் சூளையில் வேலை செய்யும் ராஜேஷ் (30) என்பவர் நடந்து சென்ற போது, இருசக்கர வாகன்த்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் தரமறுக்கவே அவரை கத்தியால் வெட்டி விட்டு செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலைக்களமாகும் தாம்பரம்?

ஒரே நாள் இரவில் நடைபெற்ற மூன்று கொலைகள் தாம்பரம் மாநகர காவல் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சைத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மூன்று கொலை சம்பவங்களில் குரோம்பேட்டை குற்றவாளி சரணடைந்ததை தவிர குன்றத்தூர், தாம்பரம் கொலை வழக்குகளில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களை விரைந்து பிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் முழுமையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.