3 பேர் கைது  pt desk
குற்றம்

சேலம்: பிறந்த 6 குழந்தைகளில் 3 குழந்தைகளை விற்ற பெற்றோர் - 2 புரோக்கர்கள் உட்பட 3 பேர் கைது

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பெற்றோர்களே தங்களுக்கு பிறக்கும் பச்சிளம் குழந்தைகளை ஒவ்வொன்றாக இரண்டு புரோக்கர்களைக் கொண்டு விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பாக தந்தை உட்பட மூவர் கைது.

webteam

செய்தியாளர்: பாலகிருஷ்ணன்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட திம்மபொதியான்வளவு பகுதியைச் சேர்ந்தவர்கள் சேட்டு (25) - குண்டுமல்லி (23) தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.

இதில், இரண்டு குழந்தைகள் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு ஆறாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து சித்தூர் கிராம செவிலியர்கள் அவரது வீட்டிற்குச் சென்ற போது, பிறந்த குழந்தை இல்லாமல் கணவன் மனைவி மட்டுமே இருந்துள்ளனர்.

baby

இதனால் சந்தேகமடைந்த கிராம செவிலியர்கள் குழந்தையைப் பற்றி விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கிராம செவிலியர்கள் விசாரித்ததில் சேட்டு குண்டுமல்லி தம்பதியருக்கு பிறந்த மூன்று குழந்தைகளை புரோக்கர்கள் மூலமாக ஒவ்வொன்றாக பணத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் விற்றது தெரியவந்துள்ளது.

செவிலியர்கள் புகார் கொடுக்க இருந்த சமயத்தில், சேலம் மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் நல உதவி மையத்திற்கு, சேட்டு குண்டுமல்லி தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தையோடு சென்று, குழந்தையை தத்து எடுப்பதாக தெரிவித்துள்ளார். சுதாரித்துக்கொண்ட சேலம் மாவட்ட குழந்தைகள் நல உதவி மைய அலுவலர் ராஜலிங்கம், குழந்தைகளை பணத்திற்கு விற்பனை செய்த பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

Arrested

இதனை அடுத்து எடப்பாடி காவல் ஆய்வாளர் பேபி மற்றும் பூலாம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மலர்விழி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், குண்டுமல்லி, சேட்டு தம்பதியருக்கு பிறந்த மூன்று குழந்தைகளை எடப்பாடி அடுத்த ஆலச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி (46), எடப்பாடி அருகே செல்லாண்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில் முருகன் ஆகிய இரண்டு புரோக்கர் மூலமாக ஒவ்வொரு குழந்தையையும் ரூ.1 ஒரு லட்சத்திற்கு அவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையை விற்பனை செய்த தந்தை சேட்டு, புரோக்கராக செயல்பட்ட முனியசாமி (46) - செந்தில் முருகன் (46) ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.