குற்றம்

காதலியை திருமணம் செய்து வைக்க நிபந்தனை: உறவினரை கடத்திய காதலன் உட்பட 3 பேருக்கு வலைவீச்சு

kaleelrahman

காதலித்த பெண்ணை திருமணம் செய்து தராததால் உறவினரை கடத்திச் சென்ற காதலன் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை சூளைமேடு மங்கள் நகரை சேர்ந்தவர் சிராஜ்பாஷா (55). இவருக்கு தஸ்லீம் பாஷா என்ற மகனும் ஆயிஷா பேகம் என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி பாத்திமா சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், மனைவி பாத்திமாவின் தங்கை மகளான தில்சத் பேகம் கிழக்கு கடற்கரை சாலையில் வசித்துவரும் வருண் என்பவரை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இது குறித்து சிராஜ் பாஷாவிற்கு தெரியவரவே திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றால் மதம் மாற வேண்டும் என வருணிடம் கூறியதாக தெரிகிறது. இது வருணுக்கு பிடிக்காமல் சிராஜ்பாஷாவிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் தில்சத் பேகத்திற்கு வேலூரை சேர்ந்த தவ்பீக் என்பவருடன் திருமணம் பேசி முடித்தனர்.

இதையடுத்து தில்சாத் பேகத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயம் தெரிந்ததால் ஆத்திரமடைந்த வருண், தனது நண்பர்களுடன் சென்று சிராஜ் பாஷாவின் மகன் தஸ்லீம் பாஷாவை காரில் கடத்தி சென்றனர். பின்னர் தஸ்லீம் பாஷா செல்போனிலிருந்து சிராஜ் பாஷாவின் மகள் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தில்சத் உடனே என்னுடன் வர வேண்டும், இல்லையென்றால் தஸ்லீம் பாஷாவை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன சிராஜ் பாஷா உடனடியாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், வருண் தொடர்பு கொண்டு மிரட்டிய செல்போன் எண்ணை வைத்து டிராக் செய்ததில் கல்பாக்கம் அருகே உள்ள கொய்யாத்தோப்பு என்ற இடத்தை காண்பித்தது. உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற சூளைமேடு போலீசாரை கண்டதும் வருண் மற்றும் அவரது நண்பர்களான வினோத், தமிழ் ஆகியோர் தப்பியோடினர். பின்னர், கடத்தப்பட்ட தஸ்லீம் பாஷாவை மீட்ட காவல் துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து தப்பியோடிய தமிழ், வினோத், வருண் ஆகியோர் மீது 341- சிறைவைத்தல், 364- ஆட்கடத்தல், 365- கடத்தி வைத்து மிரட்டல், 506(1)- கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவருகின்றனர்.