Accused pt desk
குற்றம்

சிவகாசி: போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி - வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது

webteam

செய்தியாளர்: A.மணிகண்டன்

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளர் ரஞ்சித் (45). இவரது நிர்வாகத்தின் கீழ் திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் 46 கிளைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், ரஞ்சித் கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா சிவகாசி கிளையில் தணிக்கை செய்துள்ளார். அப்போது பல நகைக்கடன் கணக்குகள் நீண்ட காலமாக திருப்பப்படாமல், வட்டி மட்டும் செலுத்தப்பட்டு வருவது அவருக்கு தெரியவந்துள்ளது.

Arrested

இதையடுத்து அந்த கணக்குகளில் உள்ள நகைகளை ஆய்வு செய்த போது, அவை போலியான நகைகள் என்பது உறுதியானது. இதுகுறித்து ரஞ்சித் விசாரித்த போது, நகை மதிப்பீட்டாளர் முத்துமணி உதவியுடன் சிவகாசியில் நகைக்கடை நடத்திவரும் தூத்துக்குடியை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மேலாளர் ரஞ்சித் அளித்த புகாரின் பேரில், சிவகாசி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நகைக் கடை உரிமையாளர் பாலசுந்தரம், நகை மதிப்பீட்டாளர் முத்துமணி ஆகியோரை கைது செய்தனர். இதைதத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளரான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குமார் அமரேஷ் (37), துணை மேலாளரான திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் (28), உதவி மேலாளரான தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த முகேஷ் குமார் (29) ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.