கைதான மூவர் pt desk
குற்றம்

சென்னை: தென்னக ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி – 3 பேர் கைது

தென்னக ரயில்வேயில் டிடிஆர் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். கட்டட வேலை செய்து வரும் இவர் வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்குச் செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்.

அவ்வாறு செல்கையில் அறிமுகமான ஆவடி வெள்ளானூர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர், தான் கல்லூரி பேராசிரியர் எனக் கூறிய நிலையில், இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், ராமகிருஷ்ணன் தனது சகோதரியின் மகன் வேலை கிடைக்காமல் கஷ்டபடுவதாக கூறி விஜய்யிடம் வேதனை தெரிவித்துள்ளார்.

Police office

இதைக் கேட்டுக் கொண்டிருந்த விஜய், “எனது நண்பர் சு.விஜய் என்பவருக்கு தெரிந்த ஒருவர் ரயில்வே தலைமையகத்தில் வேலை செய்து வருகிறார். அவர் கூறினால் டிடிஆர் வேலை கிடைத்துவிடும். அதற்காக 10 லட்சம் தரவேண்டும்” என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய ராமகிருஷ்ணன், 10 லட்சம் ரூபாயை விஜய் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கொடுத்துள்ளார். அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து ராமகிருஷ்ணன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட ஆவடி காவல் ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதையடுத்து ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விஜய், அவரது கூட்டாளிகள் சு.விஜய், வினோத் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரயில்வே

இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ரயில்வே ஊழியர் என கூறப்படும் கௌரவகுமார் என்பவரை தேடி வருகின்றனர். இதுபோன்று யாரும் குறுக்கு வழியில் பணிதேட நினைத்து ஏமாற வேண்டாமென்றும், விழிப்புணர்வுடன் இருக்கவும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.