Murder pt desk
குற்றம்

திருப்பூர்: வடமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கு - மூன்று சிறுவர்கள் கைது

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருப்பூர் கணியாம்பூண்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு ஏதுவாக நிறுவனத்தின் அருகாமையில் பணியாளர் குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் குமார் (22) என்ற இளைஞர் பணியாற்றி வருகிறார்.

Arrested

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது அறைக்கு ஆகாஷ் குமார் தனியாக சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அவரை சுற்றிவளைத்து செல்போனை பிடுங்க முயன்றுள்ளனர். ஆகாஷ் குமார் செல்போனை தர மறுத்ததால் மூன்று பேரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி விட்டு செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். பலத்த காயமடைந்த ஆகாஷ் அங்கிருந்து தப்பி தனது நண்பர்களை சந்தித்து நடந்த விஷயங்களை கூறியுள்ளார்.

இதையடுத்து என்ன செய்வதென தெரியாத புலம் பெயர் தொழிலாளர்கள், தங்கள் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அவர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த சக புலம்பெயர் தொழிலாளர்கள், நிறுவனத்தின் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருமுருகன் பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

;Police station

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மது போதையில் செல்போனை பறிக்க முயற்சி செய்தபோது அவர் தர மறுத்ததால் கத்தியால் குத்தியதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இவர்கள் மேல் வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளனவா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.