குற்றம்

ஓமலூர் - பெங்களூரு ரேஷன் அரிசி கடத்தல்: 2 டன் அரிசி பறிமுதல்; மூவர் கைது

ஓமலூர் - பெங்களூரு ரேஷன் அரிசி கடத்தல்: 2 டன் அரிசி பறிமுதல்; மூவர் கைது

Sinekadhara

ஓமலூர் அருகே கருப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு ரேஷன் அரிசி கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கருப்பூர் அருகேயுள்ள வெள்ளக்கல்பட்டி பழைய காலனி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமஜெயம், சேலம் உடையாப்பட்டியைச் சேர்ந்த தீபன்ராஜ், சுதர்சன் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும், வேனில் சோதனை நடத்தியபோது அதில் மூட்டை மூட்டையாக 2 டன் ரேஷன் அரிசி இருந்ததும் அதை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் ரேஷன் அரிசி மற்றும் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது ஓமலூர், தீவட்டிப்பட்டி, கருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அதை பெங்களூருவுக்கு கடத்துவதாக தகவல் கிடைத்தது. மேலும், வெள்ளக்கல்பட்டி அருகே ஒரு குடோனில் சில மூட்டைகள் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

தற்போது ஒரு இடத்தில் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம், கருப்பூர் ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர். அதேபோல ரேஷன் அரிசி கடத்தல் குறித்து ஓமலூர் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் அதிகாரிகளும் ஆய்வுகள் செய்து வருகின்றனர். இதுகுறித்து ரேஷன்கடை ஊழியர்கள் மூலமும் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.