கைதான நபர்கள் pt desk
குற்றம்

கூடலூர்: புலிகளை விஷம் வைத்துக் கொன்றதாக 3 வடமாநில தொழிலாளர்கள் கைது

webteam

செய்தியாளர்: மகேஷ்வரன்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதற்காடு, சோலாடி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கடந்த 20-ஆம் தேதி தாய் புலி மற்றும் சுமார் 1 வயது மதிக்கத்தக்க ஆண் புலிக் குட்டி உயிரிழந்து கிடந்தன. வனத்துறையினர் அப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் அருகில் பன்றி ஒன்றும் இறந்து கிடந்தது. உயிரிழந்த புலிகளின் உடல்கள் மற்றும் பன்றியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், பன்றியின் உடல் மற்றும் புலிகளின் குடல் பகுதியில் விஷம் இருந்தது தெரியவந்தது.

Tiger killed

இது தொடர்பாக வனத்துறையினர் இரண்டு தனிப்படைகளை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இது தொடர்பாக புலிகள் இறந்து கிடந்த தனியார் தோட்டத்தில் பணியாற்றி வந்த 3 வடமாநில தொழிலாளர்களை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்களது மொபைல் போன்களை ஆய்வு செய்தனர். அதில், உயிரிழந்த பன்றியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அதன் பின்னர் அதனை அழித்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உயிரிழந்த பன்றியின் மீது விஷத்தை ஊற்றி புலிகளை கொன்றதை 3 பேரும் ஒப்புக்கொண்டனர். புலிகளின் தோல், பற்கள் மற்றும் நகங்களுக்காக அவற்றை கொன்றதையும் ஒப்புக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து சூரியநாத் பராக், அமன் கோயாலா, சுரேஷ் நண்வார் ஆகிய 3 வடமாநில தொழிலாளர்களை கைது செய்த வனத்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.