குற்றம்

கடந்த 10 நாட்களில் சிறைகளிலிருந்து 3,963 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு

கடந்த 10 நாட்களில் சிறைகளிலிருந்து 3,963 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு

webteam


கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் சிறைகளிலிருந்து 3,963 கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரானோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறைத்துறைத் தலைவர் டிஜிபி சுனில்குமார் சிங் மேற்பார்வையில் தமிழக சிறைகளிலும் கொரானோ தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 9 மத்தியச் சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 கிளை சிறைகள் மற்றும் 3 பெண்கள் சிறப்புச் சிறைகள் உள்ளன. இந்தச் சிறைகளில் உள்ளவர்களில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகளாகவும் எஞ்சிய 30 சதவீதம் பேர் தண்டனைக் கைதிகளாகவும் உள்ளனர்.

கூட்டமாக ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு கொரோனா வருவதற்குரிய வாய்ப்புகள் அதிகம். அதனால் சிறிய குற்றங்களில் ஈடுபட்டுள்ள விசாரணை கைதிகளை ஜாமினில் வெளியே அனுப்ப நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களில் 3,963 சிறைக்கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறைகளில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 50 சதவீதம் பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் புழல் சிறையிலிருந்து 200 கைதிகள் ஜாமினில் வீட்டுக்குச் சென்று விட்டனர். மீதம் உள்ள கைதிகளிடையே சமூக இடைவெளி பின்பற்றுதல், கை கழுவுதல் உள்பட கொரானா தொடர்பான சுகாதாரத்துறை விதிகளை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உடல் நலம் பாதிப்படையும் கைதிகளுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஜாமினில் விடுவிக்கப்படும் சிறைக்கைதிகள் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குச் சென்னை நகர காவல்துறையினரே வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

இதனிடையே சிறைகளில் தற்போதுள்ள கைதிகள் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புழல் சிறையில் உள்ள கைதிகள் மூலம் ஒரு நாளைக்கு 31,000 மாஸ்க்குகள் தயாரிக்கப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதுவரை மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் முகக்கவசங்கள் தமிழக சிறைகளில் தயார் செய்யப்பட்டு தமிழகக் காவல்துறையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் தரப்பட்டுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.