2 இளைஞர்கள் கைது pt desk
குற்றம்

அருப்புக்கோட்டை: அரசுப் பள்ளி ஆசிரியையின் தங்க நகையை பறித்துச் சென்றதாக 2 இளைஞர்கள் கைது

அருப்புக்கோட்டை அருகே பேருந்துக்காக காத்திருந்த அரசுப் பள்ளி ஆசிரியையின் தங்க நகையை பறித்துச் சென்ற 2 இளைஞர்களை பந்தல்குடி போலீசார் கைது செய்துள்ளனர்

PT WEB

செய்தியாளர்: நவநீத கணேஷ்

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்தவர் அந்தோணி எட்வர்ட் யூஜின். இவரது மனைவி சாந்தி சில்வியா (54), விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வெம்பூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 28ம் தேதி பள்ளி முடிந்து தூத்துக்குடி செல்வதற்காக அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி பகுதியில் பேருந்துக்காக சாந்தி சில்வியா காத்திருந்தார்.

Police station

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சாந்தி சில்வியா கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து சாந்தி சில்வியா அளித்த புகாரின் அடிப்படையில் பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் விசாரணையில் ஆசிரியையிடம் தங்க நகையை பறித்துச் சென்றது தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த லேடன் (23) மற்றும் தூத்துக்குடி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த ஹனிபா (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மூன்று சவரன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.