Rowdies pt desk
குற்றம்

”ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அவர்கள்தான் காரணம்” - ரவுடியின் மனைவி வெளியிட்ட வீடியோ!

என்கவுண்டர் அச்சத்தால் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் கைது - ரவுடியின் மனைவி தனது கணவனுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் போலீசாரே காரணம் என வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

webteam

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்துரு (24), பாலச்சந்தர் (22). சகோதரர்களான இருவர் மீதும் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரும் ஏ ப்ளஸ் கேட்டகிரி ரவுடிகளாக விளங்கியதோடு விஷ்வாவின் கூட்டாளிகளாக இருந்து கொண்டு குற்ற செயல்களில் ஈடுபட்டும் வந்தனர்.

Chandrus wife

இந்த நிலையில், இங்குள்ள தனியார் ஆலைகளில் இருந்து ஸ்கிராப் இரும்புக் கழிவுகளை ஒப்பந்தம் எடுப்பதில் முக்கிய புள்ளிகள் இடையே தொழில் போட்டி நிலவுகிறது. தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களை கொலை செய்வதில் கூலிப்படைகளாக இருந்து வந்தனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த தனிப்படை போலீசார், ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுதது கடந்த செப்டம்பர் மாதம், பிரபல ரவுடி விஷ்வா, சுங்குவார்சத்திரம் அருகே பதுங்கி இருந்தபோது போலீசார், அவரை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய ரவுடி விஷ்வா மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து என்கவுண்டர் அச்சத்தால் விஷ்வாவின் கூட்டாளிகளான சந்துரு மற்றும் பாலச்சந்தர் உள்ளிட்ட பலரும் தலைமறைவாகினர்.

encounter

இதற்கிடையே தொழில் போட்டியால் வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் ரமேஷ் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக அரக்கோணம் அருகே தலைமறைவாக இருந்த சந்துரு, பாலச்சந்தர் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சந்துருவின் மனைவி தனது கணவனுக்கும், மைத்துனருக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி, மற்றும் மாவட்ட எஸ்.பி தான் பொறுப்பு என வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.