பெண் உட்பட இருவர் கைது pt desk
குற்றம்

ஆம்பூர்: வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை கொள்ளை - பெண் உட்பட இருவர் கைது

ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் தங்க நகையை கொள்ளையடித்தாக பெண் கைது. அவருக்கு உடந்தையாக இருந்த ஆண் நண்பரையும் உம்ராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய கொமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி. இவர் கடந்த 23.10.2024 அன்று வேலை நிமித்தமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற அவர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11 சவரன் தங்க நகை கொள்ளை போய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

CCTV Footage

இதையடுத்து உடனடியாக உம்ராபாத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்தனர்; அப்போது இருசக்கர வாகனத்தில் ஒரு பெண் வேகமாக செல்வதை பார்த்த காவல்துறை சந்தேகம் அடைந்து விசாரணையை தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் இருந்த வாகன எண்ணை வைத்து ஆம்பூர் ஜலால்பேட்டை பகுதியைச் சேர்ந்த பர்ஸானா என்ற பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்ததை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரிடமிருந்து 11 சவரன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார், பறிமுதல் செய்தனர்.

நகை திருட்டு

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இவருக்கு உடந்தையாக இருந்த ஆண் நண்பர் புகழ் மணி என்பவரையும் கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.