சென்னையில் அடகு கடையில் நகை வாங்குவது போல் வந்து 30 சவரன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற பட்டதாரி இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் பல வருடங்களாக அடகுகடை, மற்றும் நகை விற்பனை கடையை நடத்தி வருபவர் கமலேஷ் ஜெயின். இவரது கடைக்கு கடந்த 31ஆம் தேதி நகை வாங்குவது போல் வந்த இளைஞர் ஒருவர் தங்கச் சங்கிலி வேண்டும் என கேட்டுள்ளார்.
அப்போது கடையில் இருந்த செயின்களை பார்த்த அவர், செயின் மாடல் பிடிக்கவில்லை எனக் கூறிய இளைஞர், வேறு செயினை காண்பிக்கச் சொல்லியுள்ளார். இதையடுத்து கமலேஷ் ஜெயின் அருகில் உள்ள நகை கடையில் இருந்து 5 தங்கச் சங்கிலியை எடுத்து வந்து காண்பித்துள்ளார்.
அதனை வாங்கி பார்த்துக் கொண்டிருந்த போதே நகை கடைகாரரின் கவனத்தை திசை திருப்பி, கண்ணிமைக்கும் நேரத்தில் 30 சவரன் மதிப்புள்ள, 5 தங்க சங்கிலியை எடுத்துக் கொண்டு, வெளியில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நபருடன் தப்பிச் சென்றார்.
இச்சம்பவம் தொடர்பாக கமலேஷ் ஜெயின் கொடுத்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து வாகன எண்ணை வைத்து இருவரையும் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் இருவரும் பட்டப்படிப்பு படித்தவர்கள் எனவும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த் பிரான்சிஸ் சேவியர் (24), மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த வினோத் (32), என்பதும் தெரியவந்தது. பணம் பிரச்னை இருந்ததால் வினோத் தனது நண்பரான பிரான்சிஸ் சேவியரோடு சேர்ந்து திட்டமிட்டு இந்த நூதன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து 30 சவரன் தங்க நகை மற்றம் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.