சென்னையில் போதையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இரண்டு காவலர்களை பணி நீக்கம் செய்தது சரிதான் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு விருகம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த மகளிர் விடுதிக்கு மது போதையில் அத்துமீறி நுழைந்த இரண்டு காவலர்கள், அங்கிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்பட்ட நிலையில், முறையான விசாரணைக்கு பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணி நீக்க உத்தரவை எதிர்த்து இரண்டு காவல்துறையினரும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 2 காவலர்களின் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவண ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி, விசாரணையில் விதிகளும், இயற்கை நீதியும் முறையாக பின்பற்றப்பட்டு தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே பிறப்பிக்கப்பட்ட பணிநீக்க உத்தரவு சரி தான் எனவும், இரண்டு காவல்துறையினரும் பணியில் நீடிக்க தகுதியில்லை எனவும் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.