குற்றம்

காஞ்சிபுரம்: 2 நிறுவனங்கள் ரூ. 250 கோடி வருமானத்தை மறைத்தது அம்பலம் -வருமானவரித்துறை தகவல்

காஞ்சிபுரம்: 2 நிறுவனங்கள் ரூ. 250 கோடி வருமானத்தை மறைத்தது அம்பலம் -வருமானவரித்துறை தகவல்

Sinekadhara

காஞ்சிபுரத்தில் 2 நிறுவனங்கள் ரூ.250 கோடி வருமானத்தை மறைத்திருப்பது சோதனையில் அம்பலமாகியிருப்பதாக வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் காந்தி ரோட்டில் பிரபல ஜவுளி நிறுவனம் இயங்கி வருகிற பச்சையப்பாஸ் மற்றும் செங்கல்வராயன் ஜவுளிக்கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு நாட்கள் வருமான வரி சோதனை நடைபெற்றது. மேலும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றிலும் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர ஜவுளிக்கடை நிதி நிறுவன உரிமையாளரின் வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடப்பதாக செய்திகள் வெளியானது. வரி ஏய்ப்பு மற்றும் ஜவுளி மொத்த வியாபாரத்தில் ஈட்டிய பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது.  

இந்நிலையில், 2 நிறுவனங்கள் ரூ.250 கோடி வருமானத்தை மறைத்திருப்பதாக வருமானவரித்துறை தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறது. காஞ்சிபுரத்தை சேர்ந்த பட்டு சேலை நிறுவனம் ரூ.100 கோடி அளவும், நிதி நிறுவனம் ரூ.150 கோடியும் வருமானத்தை மறைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் நிதி நிறுவனத்திலிருந்து கணக்கில் வராத ரூ.1.35 கோடி ரொக்கம் மற்றும் 7.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், பட்டு சேலை நிறுவனத்திலிருந்து கணக்கில் வராத ரூ. 44 லட்சம் ரொக்கம், 9.5 கிலோ தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் வருமானவரித்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.