குற்றம்

தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை... முதலாளி உள்ளிட்ட 2 பேர் கைது

தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை... முதலாளி உள்ளிட்ட 2 பேர் கைது

kaleelrahman

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரியில் கொடிகட்டி பறந்த, சென்னையை சேர்ந்த முதலாளி உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தில் கடந்த வாரம் மர இழைப்பக ஆசாரி மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டனர். பின்னர் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி ரம்மி மற்றும் லாட்டரியில் பணத்தை இழந்தது தெரியவந்தது.


அதனைத்தொடர்ந்து எஸ்.பி ராதாகிருஷ்ணனின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும 3 நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்டவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதில் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்ட அருண் என்பவரிடம் போலீசார் விசாரணை செய்ததில், சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த முருகநாதன் என்பவர் முதலாளியாக செயல்பட்டு தமிழகம் முழுவதும் ஏஜெண்டுகளை நியமனம் செய்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விழுப்புரம் தனிப்படை போலீசார் சென்னை விரைந்து தாம்பரத்தை சேர்ந்த முருகநாதன் (50) மற்றும் மேலாளர் சையத்ஒலி (47) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 4 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் லேப்டாப் மற்றும் ஐந்து செல்போன்களை பறிமுதல் செய்து விழுப்புரம் அழைத்து வந்து ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருவரும் விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நீதிபதி பூர்ணிமா 15 நாள் நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூன்று நம்பர் லாட்டரி முதலாளி வாரத்திற்கு 3 கோடி இலக்கு நிர்ணயித்து லாட்டரி விற்பனை செய்ததும் அதில் வாரம் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளவிற்கு லாபம் கிடைக்கும் எனவும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள 3 நம்பர் லாட்டரி முதலாளி மற்றும் மேலாளரை விடுவிக்க காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் காவல்துறை உயரதிகாரிகளிடம் பேசி விடுவிக்க வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் அவர்களை விடுவிக்க மறுத்து விட்டனர்.