செய்தியாளர்: ஐஷ்வர்யா
கோவை, தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இவர்கள் பாக்கு உரிக்கும் தொழில், கட்டட வேலை, விவசாய பணி என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வடமாநில தொழிலாளர்கள் இடையே கஞ்சா விற்பனை மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், தொண்டாமுத்தூர் காவல் துறையினர் மற்றும் தனிப் பிரிவு காவல் துறையினர் அடங்கிய குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தென்னமநல்லூர் சாலை புத்தூர்பாலம் அருகே, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அசார் இஸ்லாம் (24) மற்றும் அனார் உசேன் (28) ஆகியோர், போதைப் பொருள் நிரப்பிய பவுடர் டப்பாக்களை, விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போதை பவுடரை பறிமுதல் செய்த தொண்டாமுத்தூர் காவல்துறையினர், 2 பேர் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.