Accused pt desk
குற்றம்

சென்னை: நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த இரண்டு ரவுடிகள் கைது – பின்னணி என்ன?

சென்னையில் நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த இரண்டு ரவுடிகளை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மூன்று நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஐந்து பட்டாகத்திகளை பறிமுதல் செய்தனர்.

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நாட்டு வெடிகுண்டுகளுடன் தொடர்ச்சியாக பிரபல சரித்திர பதிவேடு ரவுடியான ஆடு சுரேஷ், வியாபாரிகளை மிரட்டி மாமுல் வசூலில் ஈடுபட்டு வருவதாக அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அல்லிக்குளம் பகுதியில் இருந்த ரவுடிகளான மாடு சங்கர் மற்றும் ஆடு சுரேஷை பிடித்து விசாரணை செய்தனர்.

Arrested

அப்போது, பெரியபாளையம் பகுதியில் கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்து ஐந்து பட்டாகத்திகள் மற்றும் மூன்று நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடி நாகராஜை முன் விரோதம் காரணமாக கிருஷ்ணமூர்த்தி, கவி பாண்டி, தில் பாண்டி ஆகியோர் இணைந்து கொலை செய்தனர்.

இந்நிலையில், அதற்கு பதிலடியாக நாகராஜின் நண்பர்களான மாடு சங்கர், ஆடு சுரேஷ் ஆகியோர் இணைந்து, கடந்த 2011 ஆம் ஆண்டு கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்து பழி தீர்த்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் அதிகரித்து கொலை செய்ய இரு தரப்பினரும் காத்திருந்தனர். கடந்த 9 மாதத்திற்கு முன்னதாக கவி பாண்டியை ராயபுரத்தில் வைத்து கொலை செய்ய திட்டமிட்டிருந்த போது போலீசாரால் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடு சுரேஷ் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றித் திரிவதை வாடிக்கையாக வைத்திருப்பதையும். மேலும் அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாமுல் வசூலிக்க வீடியோ கால் மூலமாக நாட்டு வெடிகுண்டுகளை காட்டி மிரட்டுவதையும் வாடிக்கையாக வைத்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பாஜக பிரமுகரான பிபிஜிடி.சங்கரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த விவகாரத்தில் மீதமுள்ள மூன்று நாட்டு வெடிகுண்டுகளையும் தாங்கள் வைத்திருப்பதாகவும் அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.