குற்றம்

வாணியம்பாடி: முன்விரோதத்தால் மஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை; 2 பேர் கைது

வாணியம்பாடி: முன்விரோதத்தால் மஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை; 2 பேர் கைது

kaleelrahman

வாணியம்பாடி அருகே மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவாநகரில் வசித்து வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் வசீம் அக்ரம், தனது குழந்தையுடன் அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி நகர போலீசார், சடலத்தை கைப்பற்றி வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பேருந்து நிலையம், சி.எல். சாலை; மலங்கு சாலை ஆகிய பகுதிகளில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன. பின்னர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட சடலத்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் சரக டிஐஜி பாபு மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் (பொறுப்பு) ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஜீவா நகரில் வசித்து வரும் இம்தியாஷ், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக வசீம் அக்ரம், காவல் துறைக்கு தகவல் கொடுத்தால் இருந்த முன்விரோதம் காரணமாக இம்தியாஷ் கூலிப்படையை வைத்து வசீம் அக்ரமை கொலை செய்துள்ளார். இதையடுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய 2 பேரை காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் ஓட்டேரி வண்டலூர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற ரவி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த டில்லி குமார் என்பதும் தெரியவந்துள்ளது என்று டிஐஜி கூறினார்.