உத்தரப் பிரதேசத்தில் திருமணம் நடக்கவேண்டி 7 வயது குழந்தையை நரபலி கொடுக்க கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்டத்திலுள்ள சிஜார்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சோனு பால்மிகி. இவருக்கு நீண்ட நாட்களாக திருமணமாகததால் இவர் தனது நண்பர் நீத்துவுடன் சேர்ந்துகொண்டு சதேந்திரா என்ற மாந்திரீகவாதியை சந்தித்திருக்கின்றனர். அவரும் திருமணம் நடக்கவேண்டுமென்றால் ஒரு மனித உயிரை நரபலியிடவேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால் சோனுவும் நீத்துவும் திட்டமிட்டு சோனு வீட்டிற்கு அருகில் வசித்துவரும் குடும்பத்தினரின் 7 வயது சிறுமியை கடத்தியிருக்கின்றனர்.
சிறுமி காணாமல் போய்விட்டதாக மார்ச் 13ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிட்டத்தட்ட 200 பேரை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்த போலீசாருக்கு கடைசியாக சோனு மற்றும் நீத்து இருவரின் மீதும் சந்தேகம் வலுக்கவே, இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தியிருக்கின்றனர். இதற்குமுன்பு குற்றச்செயல்கள் எதிலும் இருவரும் ஈடுபட்டதில்லை எனவும், அதிகம் மது அருந்தும் பழக்கம் மட்டுமே இருப்பதாகவும் சிறுமியை மாந்திரீகவாதியின் பேச்சைக் கேட்டு கடத்தியதையும் விசாரணையில் ஒப்புக்கொண்டனர்.
மேலும் ஹோலி பண்டிகையன்று சிறுமியை நரபலியிடவேண்டும் என்பதால் பாக்பாத்திலுள்ள தனது சகோதரியின் வீட்டில் வைத்திருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். குழந்தையை பத்திரமாக மீட்ட போலீசார், சோனு மற்றும் நீத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த குற்றத்தில் ஈடுபட்ட மாந்திரீகவாதி சதேந்திரா உட்பட மூவரை தீவிரமாக தேடிவருவதாகவும் டிசிபி சந்தேர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சாமர்த்தியமாக செயல்பட்டு சிறுமியை பத்திரமாக மீட்ட குழுவை பாராட்டிய போலீஸ் கமிஷ்னர் அலோக் சிங், அவர்களுக்கு ரூ.5000 வெகுமதியாக அளித்துள்ளார்.