சென்னையில் கடன் வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வெம்பாக்கம் ஈசிஆர் சாலையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் நடத்தி வந்தவர் குமார். அவருக்கு சுத்திகரிப்பு நிலையத்தை விரிவுப்படுத்த ரூ.25 லட்சம் தேவைப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரூ.15 லட்சம் குமாரிடம் இருக்க, மீதம் ரூ.10 லட்சம் தேவைப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை தனக்கு தெரிந்தவரும், நண்பருமான மாடம்பாக்கத்தில் உள்ள லோகேஷ் என்பவரிடம் குமார் கூறியுள்ளார். இதையடுத்து தனக்கு தெரிந்த பைனான்சியர் அம்பத்தூரில் உள்ளதாக கூறிய லோகேஷ், அவரிடம் ரூ.15 லட்சத்தை காண்பித்தால் உடனே ரூ.10 லட்சம் தருவார் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அவரது வார்த்தையை நம்பி கடந்த 5ஆம் தேதி ரூ.15 லட்சம் பணத்துடன் லோகேஷை அழைத்துக்கொண்டு அம்பத்தூர் சென்றுள்ளார் குமார். அங்கு சென்றபின் குமாரிடம் பணத்தைய பெற்றுக்கொண்டு, பைனான்சியரிடம் பணத்தை காட்டிவிட்டு வருவதாக லோகேஷ் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் லோகேஷ் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த குமார், உடனடியாக லோகேஷ் தங்கிருந்த மாடம்பாக்கம் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.
ஆனால் லோகேஷ் 4ஆம் தேதியே வீட்டை காலி செய்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார் குமார். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அம்பத்தூர் காவல்துறையினர், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராங்கத்தில் தலைமறைவாக இருந்த லோகேஷை கைது செய்தனர். அத்துடன் அவரிடமிருந்த ரூ.12 லட்சத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் மோசடி செய்த பணத்தில் அவர் வாங்கிய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
(தகவல்கள்: நவின், புதிய தலைமுறை செய்தியாளர்)