District SP pt desk
குற்றம்

தென்காசி: சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 102 பேரை கைது - காவல் கண்காணிப்பாளர் அதிரடி

தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக ஒரே நாளில் 102 பேரை கைது செய்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

webteam

செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 60 நபர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் போதைப் பொருள் கலாசாரத்தை கட்டுப்படுத்த தமிழக போலீஸ் டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பேரில் தமிழகம் முழுவதும் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டு போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

SP Office

அப்படி தென்காசி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு மது பாட்டில்களை விற்பனை செய்த 63 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 496 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 10 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.18,940 மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், புகையிலை பொருட்களை விற்பனை செய்த 9 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.3,570 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்கள் உட்பட பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 102 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.