சென்னை வேளச்சேரி சாலையில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், இரு குழுக்களாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்குள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே நேற்று பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஒரு குழு மாணவர்கள் இன்னொரு குழுவினர் மீது பட்டாசு வீசியுள்ளனர். அது பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கிண்டி காவல்துறை விரைந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இது குறித்து நேற்றைய தினம் பேசிய சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, “சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையேயான மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்படவில்லை; திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்துள்ளோம். மற்றொரு மாணவரைத் தேடி வருகிறோம்” எனத் தெரிவித்திருந்தார். 12 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று (22.8.2023) இச்சம்பவம் தொடர்பாக 10 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.