குற்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு - முழு விவரம்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு - முழு விவரம்

Sinekadhara

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாததால், கோகுல்ராஜின் தாய் சித்ரா போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் கோகுல்ராஜை தேடிய போலீசார் அவரை நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்டனர்.

இந்த கொலைவழக்கில் சங்ககிரி தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். பட்டியலினத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் வேறு இனத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் அவரை கண்ணைக்கட்டி நண்பரின் கார் எண்ணை மாற்றி அதில் ஏற்றிக்கொண்டுபோய், தற்கொலை செய்துகொள்வதாக வீடியோ ஒன்றை தனது செல்போனில் பதிவுசெய்ய மிரட்டியதுடன், தற்கொலை குறிப்பு ஒன்றையும் கட்டாயப்படுத்தி எழுத வைத்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், ரயில் தண்டவாளம் அருகே கோகுல்ராஜின் தலையை கொடூரமாக துண்டித்து கொலை செய்துவிட்டு அந்தப் பெண்ணின் செல்போனை ஆற்றில் எறிந்துவிட்டு அங்கிருந்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. கோகுல்ராஜை மிரட்டி தற்கொலை செய்வதாக வீடியோ எடுத்து பின்னர் கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசியதும் உடற்கூராய்வில் நிரூபணமானது. முக்கிய குற்றவாளிகளான யுவராஜ் மற்றும் அவரது கார் டிரைவர் அருண் ஆகிய இருவரும் தலைமறைவாயினர்.

ஆணவப்படுகொலையான இந்த வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா அதே ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் இந்த வழக்கு விசாரணை நாமக்கல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கொலைவழக்கில் தேடப்பட்ட யுவராஜ் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் ஆடியோவை வெளியிட்டது அப்போது பேசுபொருளானது. அதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி தலைமறைவாக இருந்த யுவராஜ் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபிறகு, நாமக்கல் சிறப்பு அமர்வு நீதிமன்றத்திலே விசாரணைக்கு வந்தது. அங்கு வழக்கு விசாரணையில் குளறுபடிகள் ஏற்பட்டதால் கோகுல்ராஜின் தாயார் சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். அங்கு நடைபெற்ற விசாரணையில் 17 பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர். அதில் ஒருவர் இறந்த நிலையில், மீதமுள்ள 16 பேரில் ஒருவர் காணாமல் போய்விட்டார். அதன்பிறகு 15 பேர்மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அதன்பிறகு இந்த வழக்கு 2019ஆம் ஆண்டு மதுரை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. மேலும் 500 ஆவணங்களும், 74 சான்றுப் பொருட்களும் சமர்ப்பிக்கப்பட்டன. அதன்பிறகு தற்போது இந்த வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட யுவராஜ் உட்பட 10 பேருக்கும் தண்டனை விவரம் வரும் 8ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த வழக்கில் சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை மற்றும் சுரேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.