கொரோனா வைரஸ்

கொரோனா அச்சம்: வீட்டிலேயே முடங்கிய முதியோர் ! உதவும் இளைஞர்கள்

jagadeesh

கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டாலும், மனிதர்களுக்குள் மறைந்திருக்கும் மனிதத்தை வெளிக்கொணர ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகமே கொரோனா வைரஸ் என்ற அரக்கனை கண்டு அஞ்சி வீட்டிற்குள் முடங்கியுள்ளது. அதற்கு பிரான்சும் விதிவிலக்கல்ல. வீட்டை விட்டு வெளிவர முடியாதோருக்கு உதவுகிறார்கள் நைஸ் நகர இளைஞர்கள் சிலர். குழுவாக இணைந்துள்ள அவர்கள் தங்களுடைய கைப்பேசி எண்களை முதியவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒட்டியுள்ளனர்.

அதனை பார்த்து முதியவர்கள் தங்களுக்கு தேவையான மளிகை, மருந்து, உணவு உள்ளிட்ட பொருள்களின் பட்டியலை தெரிவிக்கின்றனர். அந்த பொருள்களை ஒருமணி நேரத்தில் முதியவர்களிடம் கொண்டு சேர்க்கிறது இளைஞர் குழு. முதியோர் மட்டுமின்றி நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரும் இந்தச் சேவையை நாடி வருகின்றனர். கொரானா வைரஸ் பாதிப்பால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான உணவு, பழங்கள், போன்றவையையும் இந்தக் குழு தகுந்த பாதுகாப்போடு வழங்கி வருகிறது.

மீன், இறைச்சி, பாஸ்தா என என்ன தேவையோ அதை மக்களுக்கு வாங்கி கொடுத்து அவர்களின் சிரமத்தை போக்குகிறார்கள் ஓல்ட் நைஸ் குழுவினர். இந்தச் சேவைக்காக அவர்கள் கூடுதல் கட்டணங்கள் ஏதும் வசூலிப்பதில்லை. பொருள்களுக்கான பணத்தை மட்டுமே பெற்றுக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.