பிரிட்டனை உலுக்கி வரும் கொரோனா புதிய வகை திரிபான எக்ஸ் இ வைரஸால் மும்பையில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது வரை அது உறுதி செய்யப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் வகை கொரோனாவை விட 10 மடங்கு வேகமாக பரவக்கூடியது எக்ஸ் இ எனப்படும் புதிய மாறுபாடு. இது ஒமைக்ரான் பிஏ1 மற்றும் பிஏ2 ஆகிய இரண்டு மாதிரிகளின் கலப்பாகும். பிரிட்டனில் பரவிவரும் இந்த புதிய வகை கொரோனா, இந்தியாவிலும் முதன் முறையாக மும்பையில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மும்பை மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் புதிய திரிபுவால் அந்த நபர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பது உறுதி செய்யப்படவில்லை என டெல்லியில் உள்ள மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே போல் பெங்களூருவை சேர்ந்த மரபியல் ஆராய்ச்சி நிபுணர் ராகேஷ் மிஸ்ரா, எக்ஸ் இ திரிபுவை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். அதே நேரம் வழக்கமான முன்னெச்சரிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றுவதை மறந்து விடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.