கொரோனா வைரஸின் அடுத்த உருமாற்றம் மிகவும் தீவிரமானதாகவும் கொடியதாகவும் இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் ஏற்கெனவே டெல்டா என்றும் ஒமைக்ரான் என்றும் உருமாற்றம் பெற்று பரவி வருகிறது. இன்னும் உலகம் முழுவதும் இதன் பாதிப்புகள் காணப்படும் நிலையில், ஒமைக்ரான் என்ற உருமாற்றத்துடன் கொரோனா நின்றுவிடாது என்று உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப்பிரிவுத் தலைவர் மரியா வான் கெர்கோவ் எச்சரித்துள்ளார். அடுத்து வரும் உருமாறிய கொரோனா, ஒமைக்ரானைப் போல இருக்கும் என்று சொல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவின் அடுத்த உருமாற்றம் மிகவும் தீவிரமான பாதிப்புகளைத் தரும் என்று மரியா வான் கெர்கோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தடுப்பூசி போட்டுக் கொள்வது, முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது மட்டுமே எதிர்வரும் பாதிப்புகளைத் தடுக்கும் வழிமுறைகள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.