கொரோனா வைரஸ்

‘ஒரே பூமி, ஒரே சுகாதாரம்’ என்பதன்மூலம், மனித இனம் பெருந்தொற்றை வெல்லும்: மோடி உரை

‘ஒரே பூமி, ஒரே சுகாதாரம்’ என்பதன்மூலம், மனித இனம் பெருந்தொற்றை வெல்லும்: மோடி உரை

நிவேதா ஜெகராஜா

கோவிட் 19-ஐ எதிர்த்து போராடும் பணியில், உலகின் பிற நாடுகளுக்கான டிஜிட்டல் உதவிக்காக கோவின் தள பயன்பாட்டு அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக, கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

அப்போது, அனைத்து நாடுகளிலும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களுக்கு அவரது இரங்கலை தெரிவித்திருத்தார். தொடர்ந்து, தனது உரையை பிரதமர் தொடங்கினார். தனது உரையில், “நூறு ஆண்டுகளில், இதுபோன்ற பெருந்தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. எவ்வளவு பெரிய சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும், இதுபோன்ற சவாலை தனியாக தீர்க்க முடியாது. கோவிட் 19 தொற்றின் வழியாக, மனித இனம் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம், ’நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி முன்னேற வேண்டும்’ என்பதுதான்.

இந்த காலகட்டத்தில், கொரோனாவை எதிர்கொள்ள சிறந்த முறைகளை நாம் ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டு வழிகாட்ட வேண்டும். அந்தவகையில் தனது அனுபவங்கள், நிபுணத்துவம் மற்றும் வளங்கள் அனைத்தையும் உலக சமூகத்துடன் பகிர்ந்துக்கொள்ள இந்தியா உறுதிப்பூண்டுள்ளது. அதேபோல உலக நடைமுறைகளை கற்பதிலும் இந்தியா ஆர்வமாக உள்ளது.

பெருந்தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவத்துவம் வாய்ந்தது. மென்பொருள் என்பது வளங்கள் தடையில்லாத ஒருபகுதி. இதை உணர்ந்ததால், இந்தியா தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானவுடன், தனது கோவிட் கண்காணிப்பு மற்றும் கண்டுபிடிப்பு செயலியை அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் விதமாக்கியுள்ளது.

200 மில்லியன் பேர் பயன்படுத்தும் இந்தியாவின் ஆரோக்கிய சேது செயலி, மேம்படுத்துபவர்களுக்கு தயார்நிலையில் கிடைக்கும் தொக்குப்பாக உள்ளது. இந்தியாவில் இது பயன்படுத்தப்பட்டிருப்பதால், இதன் வேகம் அதிக அளவுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. அதை அனைவரும் உறுதியாக நம்பலாம்.

தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்காக, இதற்கு திட்டமிடும்போது முற்றிலும் டிஜிட்டல் அணுகுமுறையை பின்பற்ற இந்தியா முடிவு செய்தது. அதன் முடிவாக, தடுப்பூசி போடப்பட்டவர்கள் பட்டியலை பெற முடிந்தது. மேலும் தொற்றுக்கு பிந்தைய உலகில் இயல்புநிலையை விரைவுப்படுத்தவும் இந்த செயலி உதவியது. பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஆதாரம் இதில் கிடைக்கும். மேலும் எப்போது, எங்கு, யாரால் தடுப்பூசி போடப்பட்டது என்பதை நிரூபிக்க, மக்களுக்கும் இது உதவுகிறது.

தடுப்பூசி பயன்பாட்டை கண்காணிக்கவும் மற்றும் வீணாவதை குறைக்கவும், இந்த டிஜிட்டல் அணுகுமுறை உதவுகிறது. ஒட்டுமொத்த உலகமும் ஒரு குடும்பம் என்ற இந்திய தத்துவத்தை கருத்தில் கொண்டு, கோவின் தளம் பிறநாடுகளும் பயன்படுத்தும் வகையில் தயார்படுத்தப்படுகிறது. ஆகவே விரைவில் இது உலக நாடுகள் அனைத்திலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கோவின் தளத்தை உலகத்துக்கு அறிமுகப்படுத்த இன்றைய மாநாடு முதல் நடவடிக்கை எடுக்கப்படும். கோவின் இணையதளம் மூலம், இந்தியா 350 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை போட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், ஒரே நாளில் 9 மில்லியன் (90 லட்சம்) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டன. மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், அதை நிரூபிக்க எந்த துண்டுச்சீட்டையும் எடுத்துச்செல்ல தேவையில்லை. ஏனெனில், அது டிஜிட்டல் வடிவிலேயே கிடைக்கிறது.

விருப்பமுள்ள நாடுகளின் உள்நாட்டு தேவைக்கேற்ப இந்த மென்பொருளின் தனிப் பயனாக்கத்தை தெரிந்துக்கொள்ளலாம். ‘ஒரே பூமி, ஒரே சுகாதாரம்’ என்ற இந்த அணுகுமுறை மூலம், மனித இனம் நிச்சயம் இந்த பெருந்தொற்றை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது” எனக்கூறி, பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.