வார இறுதி நாட்களில் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிவாரத்திலேயே வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுவதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.
ஏற்காட்டில் கடந்த 2 வார காலமாக விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் ஏற்காடு செல்ல முற்றிலும் தடைவிதித்து சேலம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அனைத்து வாகனங்களும் அடிவார சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி அனுப்பப்பட்டன.
வார இறுதி நாட்களை தவிர்த்து பிற நாட்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று, RTPCR பரிசோதனை முடிவு சான்று வைத்திருத்தல் அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். ஏற்காட்டை சேர்ந்தவர்கள், ஏற்காட்டை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், உரிய ஆவணங்களை காட்டியபிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.