கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கட்டுக்குள் வந்தது. அதன்பின் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டதில் இதுவரை 18 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் வெள்ளக்கோவில் கே.பி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (82) என்பவர், கடந்த சில தினங்களாக காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் இருந்தார். அங்கு இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
இவரது மனைவி பழனாத்தாள் (78) என்பவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டது. இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணித்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர் அதிகாரிகள். நேற்றைய தினம் கொரோனாவுக்கு புற்றுநோயாளியொருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.