கொரோனாவை தடுக்க பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது.
ஒமைக்ரான் வகை கொரோனா உலக நாடுகளில் வேகமாக பரவும் சூழலில், 3ஆவது டோஸ் தடுப்பூசியின் தேவை எழுந்தது. இதையடுத்து முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேலான முதியவர்கள், இணை நோயுள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் இத்திட்டம் இன்று தொடங்கும் நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள். முதல் 2 டோஸ்கள் எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதே வகை தடுப்பூசியே 3ஆவது முறை செலுத்திக்கொள்ள முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.