சொத்துப் பிரச்னையில் மகனே தந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரடிக்குப்பம் கிராமத்தில் வசிந்து வந்தவர் செல்வரங்கம்( 80). இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. இவரது மூத்த மகன் முத்துராமன் (56) அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இளையமகன் கிராமத்திலேயே தந்தையுடன் இணைந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பெரிய மகன் முத்துராமலிங்கத்திற்கும் அவரது சகோதரருக்கும் சொத்து பிரச்சினை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இரு மகன்களையும் செல்வரங்கம் சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் இதில் சமாதானம் ஆகாத முத்துராமலிங்கம், அவரின் மகன் ஜெயகுமார் ( பல் மருத்துவர் ) உதவியுடன் செல்வரங்கத்தை அடித்து, அவரின் நிலத்தில் உள்ள கிணற்றிலேயே மூழ்கடித்துள்ளார். இதில் செல்வரங்கம் மூச்சு திணறி இறந்துள்ளார்.
அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்த செஞ்சி தீயணைப்பு வீரர்கள் போராடி உடலை மீட்டெடுத்தனர். இது குறித்து தற்போது அவலூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.