கொரோனா வைரஸ்

'2 -3 வாரங்களுக்கு மேல் தொடர் இருமலா? காசநோய் பரிசோதனை செய்ங்க’- மத்திய அரசு அறிவுரை

'2 -3 வாரங்களுக்கு மேல் தொடர் இருமலா? காசநோய் பரிசோதனை செய்ங்க’- மத்திய அரசு அறிவுரை

நிவேதா ஜெகராஜா

கொரோனாவுக்கான இணைநோய்கள் பட்டியலில் புதிதாக காசநோயையும் இணைத்துள்ளது மத்திய சுகாதாரத்துறை. மேலும் காசநோய் இருப்பவர்களுக்கு, தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும், கொரோனா உறுதியானவர்களுக்கு தொடர்ந்து 2 அல்லது 3 வாரங்களுக்கு இருமல் தெரியவந்தால் அவர்கள் காசநோய்க்கான பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஹெச்.ஆர்.சி.டி பரிசோதனையை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசநோய் மட்டுமன்றி, இன்னும் 6 காரணங்கள் ‘கொரோனாவை தீவிரப்படுத்தும் வாய்ப்புள்ள நோய்கள்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்காரணங்கள்: 60 வயதுக்கு மேற்பட்டு இருப்பது, இதய பாதிப்பு - உயர் ரத்த அழுத்தம் - இதய நோய் - சர்க்கரை நோய் இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது, காசநோய் இருப்பது, நுரையீரல் - சிறுநீரக பாதிப்பு இருப்பது, பெருமூளை தொடர்பான சிக்கல் இருப்பது, உடல் பருமன் இருப்பது ஆகியவையாகும்.

கடந்த இரு அலை கொரோனாவின்போதும், மத்திய அரசு இதுதொடர்பாக தனி அறிக்கை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. காசநோய்க்கும் கொரோனாவுக்கும் ஒரேமாதிரியான அறிகுறிகள்தான் (இருமல், மூச்சுத்திணறல், காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு) இருக்கும் என்பதால் பலரும் இரண்டையும் குழப்பிக்கொள்வதுண்டு என்கின்றனர் மருத்துவர்கள். இவ்விரண்டில், கொரோனா பாதிப்பு சில வாரங்களில் சரியாகிவிடும். ஆனால் காசநோய், நீடித்து இருக்கக்கூடியது மற்றும் தீவிர வாழ்நாள் பாதிப்பை ஏற்படத்த வல்லது. இதனாலேயே மருத்துவர்கள் பலரும் ‘2 - 3 வாரங்களுக்கும் மேல் இருமல் தொடர்ந்து தெரியவந்தால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. மருத்துவமனை சென்று காசநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துவருகின்றனர்.

‘2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை ஒழிப்போம்' என அரசு தீர்மானம் எடுத்திருக்கும் இந்த நேரத்தில், அதை கொரோனா கடினமாக்கி வருகிறது.