கொரோனா வைரஸ்

கொரோனா அச்சம்: டெல்லியில் தனியார் அலுவலகங்கள், உணவகங்கள், மதுபானக்கூடங்கள் செயல்பட தடை

கொரோனா அச்சம்: டெல்லியில் தனியார் அலுவலகங்கள், உணவகங்கள், மதுபானக்கூடங்கள் செயல்பட தடை

நிவேதா ஜெகராஜா

டெல்லியில் உணவகங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க, பார்சல் சேவையை மட்டுமே அனுமதிக்க முடிவுசெய்துள்ளது டெல்லி அரசு. மேலும் தனியார் அலுவலகங்களை மூடவும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே அத்தியாவசிய பணி சாராத அலுவலகங்களை சேர்ந்தோர் (அரசு அலுவலகம் உட்பட) வீட்டிலிருந்து பணி செய்ய அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அது உத்தரவாகவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடந்திருந்தது. அதன்முடிவில், அத்தியாவசிய தேவையை தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வரவேண்டாமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் உணவகங்களில் நேரடியாக கூடுவது, மதுபானக்கூடங்களில் கூடுவது, நேரடியாக அலுவலகம் செல்வதற்கு என பலவற்றுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்போதைக்கு டெல்லியில் முழு பொதுமுடக்கத்தை அறிவிக்கும் திட்டம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை பொறுத்தவரை கொரோனா உறுதிசெய்யப்படுவோர் எண்ணிக்கை மட்டுமன்றி, கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. உதாரணத்துக்கு கடந்த ஜனவரி 5ஆம் தேதி முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை 46 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தனர். அவர்களில் 11 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவையன்றி 46 பேரில், 34 பேர் புற்றுநோய், இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்ற பல்வேறு உடல் உபாதைகளை கொண்டவர்கள். மேலும் மொத்தம் உயிரிழந்தோரின் 60 வயதிற்கு மேற்பட்டோர் 25 பேர் எனவும் 40 முதல் 60 வயது வரையிலான 14 பேர் என்றும் டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக கடந்த 10 நாட்களில் தலைநகர் டெல்லியில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்கள் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே, அரசின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.