'பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் கொரோனா பரவல் அதிரிக்கும் என்பதால், அதனை ஊக்குவிக்க வேண்டாம்' என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பொது இடங்களில், ஆவி பிடிப்பதற்கான கருவிகள் வைக்கப்பட்டு, பொதுமக்கள் பலரும் ஆவி பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு மருத்துவத் துறை சார்ந்த பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, சென்னை லயோலா கல்லூரியில் கொரோனா தடுப்பு மையத்தை இன்று தொடங்கி வைத்து பேசி மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "பொது இடங்களில் ஆவி பிடிக்க மக்கள் கூட்டமாக முன் வருகின்றனர். கூட்டம் கூடும் எந்தவொரு இடத்திலும், கொரோனா பரவும் வேகம் அதிகமாகும். ஆகவே பொது இடத்தில் மக்கள் இப்படி ஆவிபிடிக்க வேண்டாம்" என வேண்டுகோள் வைத்துள்ளார்.
மேலும் பேசியவர் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் இது போன்ற விஷயங்களை செய்ய வேண்டாம் என்றும், மருத்துவர்களின் அறிவுரைகள் இல்லாமல், ஆவி பிடித்தால் நுரையீரல் தொற்று ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார். மட்டுமன்றி, தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கையும் வைத்துள்ளார் அமைச்சர். நூற்றுக்கு நூறு சதவிகிதம் தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருக்கிறார் அமைச்சர்.
முன்னதாக பொது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற ஆவிபிடிக்கும் வழிமுறைக்கு மருத்துவர்கள் பலரும், சமூக வலைதள பயன்பாட்டாளர்களூம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.