உலக அளவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகமாக பரவினாலும், அதன் தாக்கம் தீவிரமாக இல்லாதது தடுபூசிகள் பலன் அளிப்பதையே காட்டுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராக நல்ல பலனை அளிப்பதுடன் பல்வேறு நோய்களிலிருந்தும் நம்மை காக்க வல்லதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் சார்பில் காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்திருக்கும் கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் கோவிட் தொற்றிற்கு எதிராக அதிக அளவு பாதுகாப்பு அளிப்பதாக குறிப்பிட்டார். தடுப்பூசியின் ஆற்றல் வயது, முன்பே இருக்கும் நோய்கள் போன்ற பல்வேறு காரணிகளை சார்ந்து இருப்பதாகவும் தெரிவித்தார். ஒமைக்ரான் வகை பாதிப்பு குறித்த தகவல்கள் இப்போதுதான் கிடைக்கத் தொடங்கியிருப்பதாக சுட்டிக்காட்டிய சவுமியா சுவாமிநாதன் ஆய்வகங்களில் நடத்தப்படும் ஆய்வுகளில் தடுப்பூசிகள் கிருமியை அழிக்கும் ஆற்றல் குறைந்திருப்பதை காட்டுவதாக தெரிவித்தார்.
இதனால் தடுப்பூசி செலுத்தியவர்கள், ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பிலும் ஒமைக்ரான் வகை பரவுவதாகக் கூறினார். இதனாலேயே உலக அளவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். பாதிப்பு பரவும் அதே வேகத்தில் மருத்துவமனைகள் நிரம்பவில்லை என்றும் வெண்டிலேட்டர்களுக்கு தேவை அதிகரிக்கவில்லை என்பதும் நல்ல அறிகுறி என்றும் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.