கொரோனா வைரஸ்

"கொரோனா வைரஸ் தொற்று மூளையை பாதிக்கும்" : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!

"கொரோனா வைரஸ் தொற்று மூளையை பாதிக்கும்" : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!

webteam

கொரோனா வைரஸ் தொற்று மூளையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்த தருணம் முதலே, கொரோனா நோய் அறிகுறிகள், நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. கோவிட் 19 தொற்று காரணமாக ஏற்படும் மிகப்பெரிய சிக்கல் சுவாச செயலிழப்பு. இதனால் தான் நிறைய பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். கிட்னி பாதிக்கப்பட்டவர்களையும் இந்த நோய் தொற்று எளிதில் பாதிக்கின்றது.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்றால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு குறித்த அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு மூளை செயலிழப்பு, பக்கவாதம், மூளை வீக்கம், மனநோய், மயக்கம், நரம்பு பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 43 பேரின் உடல்களில் இத்தகைய பாதிப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, லண்டன் பல்கலைக் கழகத்தின் நியூராலஜி துறையைச் சேர்ந்த மைக்கேல் ஜண்டி கூறுகையில், “தற்போதை நோய் தொற்றின் தாக்கத்தினால் மிகப்பெரிய அளவில் மூளை பாதிப்பு ஏற்படுவதை நாம் பார்க்க போகிறோம். 1918 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய காய்ச்சல் நோய் தொற்று பரவலை போன்றது இது. அப்போது, 1918 காய்ச்சல் தொற்றின் காரணமாக 1920 மற்றும் 1930களில் மிகப்பெரிய அளவில் encephalitis lethargica எனப்படும் மிகப்பெரிய நோய் பாதிப்பு ஏற்பட்டது” என்றார்.

அதேபோல், கனடாவில் உள்ள வெஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி அட்ரியன் ஒயென் கூறுகையில், “எனக்கு இருக்கும் கவலையெல்லாம் லட்சக்கணக்கான மக்கள் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு வருடத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த ஒரு கோடி பேர் இருப்பார்கள். அவர்களுக்கு அறிவாற்றல் குறைபாடுகள் இருக்கும். அது அவர்களின் செயல்படும் திறனை பாதிக்கும். அதேபோல், அவர்களின் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளை கூட பாதிக்கும்” என்கிறார்.