கொரோனா வைரஸ்

கொரோனாவை எதிர்கொள்ள ரூ.50 லட்சம் நிதி வழங்கினார் சச்சின் !

கொரோனாவை எதிர்கொள்ள ரூ.50 லட்சம் நிதி வழங்கினார் சச்சின் !

jagadeesh

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அரசாங்கத்துக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கினார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 67ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆளானோர் எண்ணிக்கை 724ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசுக்கு உதவும் வகையில் திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து வருகின்றனர். தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் ரூ.1 கோடி, தெலுங்கு நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடியை கொரோனா நிதிக்குக் கொடுத்துள்ளனர்.

இதேபோல விளையாட்டு வீரர்களில் ஓட்டப் பந்தைய வீராங்கனை ஹிமா தாஸ் தன்னுடைய ஒருமாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அதேபோல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா ஆகியோரும் நிதியுதவி அளித்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், மகாராஷ்டிரா மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் நிதியாக கொடுத்துள்ளார்.

இதேபோல சவுரவ் கங்குலியும் மேற்கு வங்கத்துக்கு கொரோனா தடுப்பு பணிக்காக நிதியளித்துள்ளார். இர்பான் பதான் மற்றும் யூசஃப் பதான் சகோதரர்கள் பரோடா மாநகராட்சிக்கு 4 ஆயிரம் முகக் கவசங்களை இலவசமாக வழங்கியுள்ளனர்.