கொரோனா வைரஸ்

சென்னையில் திடீரென கொரோனா பாதிப்பு சரிவு? : மருத்துவ வல்லுநர் சூசகம்

சென்னையில் திடீரென கொரோனா பாதிப்பு சரிவு? : மருத்துவ வல்லுநர் சூசகம்

webteam

சென்னையில் தினசரி பரிசோதனைகள் எண்ணிக்கை இன்றி கொரோனா பாதிப்பு குறைந்ததை விளக்குவது கடினம் என மருத்துவ வல்லுநர் பிரப்தீப் கவுர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது. தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக சென்னையில் 10 நாட்களுக்கும் மேலாக ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 919 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் நம்பிக்கையளிக்கும் விதமாக இது அமைந்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மருத்துவ வல்லுநர் பிரப்தீப் கவுர், சென்னையின் திடீர் தொற்று எண்ணிக்கை வீழ்ச்சி என்பது தினசரி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இன்றி விளக்குவது கடினமானது எனக் கூறியுள்ளார். அத்துடன் சென்னையில் எத்தனை சதவீதம் பாதிப்பு என்பதும் இல்லாமல் விளக்குவது கடினம் என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக தங்கள் குழுவினர் தமிழகம் மாவட்ட ரீதியான ஆய்வினை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் குழுவில் இடம்பெறுள்ள ஒரு மருத்துவருக்கு சென்னையில் நாள்தோறும் எவ்வளவு கொரோனா சோதனைகள் நடத்தப்படுகிறது என்ற தகவல் இல்லை என்பது இவரது ட்விட்டர் பதிவு மூலம் தெரிய வருகிறது. ஏனென்றால், கொரோனா பாதிப்பில் 70 சதவீதத்திற்கு மேல் சென்னையில்தான் இதுவரை இருந்து வந்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் தான் பெரும்பாலும் கொரோனா தாக்கத்திற்கு ஆளான பகுதிகளாக இருக்கும். ஆனால், இன்றைக்கு வெளியாகியுள்ள தகவலின்படி வெறும் 60 சதவீதம் தான் சென்னையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.