கொரோனா வைரஸ்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா தொற்று உறுதி

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா தொற்று உறுதி

நிவேதா ஜெகராஜா

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக ட்விட்டரில் அவர் அறிவித்துள்ளார். மேலும் தன்னுடன் சேர்த்து தனது 2 குழந்தைகளுக்கும் தொற்று உறுதியாகியிருப்பதாக ஆன்லைன் செய்தி கலந்தாய்வில் பகிர்ந்திருக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை முதலே ஜஸ்டின் ட்ரூடோ தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த தனது அறிவிப்பில், தனக்கு கொரோனா அறிகுறிகள் தெரிவதாகவும், அதனால் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தனக்கு கொரோனா உறுதியாகிவிட்டதாக பதிவிட்டிருக்கும் அவர், தொடர்ந்து இணைய வழியில் பணிசெய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

கொரோனா உறுதியாகியிருந்தாலும், தான் நலமுடனே இருப்பதாக தெரிவித்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ, மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், பூஸ்டர் டோஸ் போடவும் அறிவுறுத்தியுள்ளார்.

கனடாவில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, பல்வேறு இடங்களுக்குச் செல்பவர்களுக்கு, தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டாவா நகரில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. அதில் உச்சகட்டமாக நேற்று முன்தினம் சரக்கு வாகனங்கள் மூலமாக பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்தனர்.

அப்போது அவர்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். போராட்டக்காரர்களின் வாகனங்களை ராணுவத்தினர் மடக்கியபோது அவர்கள் ஒரே நேரத்தில் வாகன ஒலி எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் ரகசிய இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போராட்டக்காரர்களிடமிருந்து பாதுகாத்து கொள்வதற்காகவே ஜஸ்டின் ட்ரூடோ தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கக்கூடுமென கனடாவின் சில ஊடகங்கள் கணித்துள்ளது.