கொரோனா வைரஸ்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வருகிறது பிளாஸ்மா வங்கி... யாரெல்லாம் தானம் செய்யலாம்?

Veeramani

கொரோனோ தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி மூலமாக சிகிச்சை அளிப்பதற்காக, பிளாஸ்மா வங்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திறக்கப்படுகிறது.

பிளாஸ்மா சிகிச்சை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு ஆகியவற்றின் அனுமதியை தமிழக அரசு பெற்றுள்ள நிலையில் 2 கோடி மதிப்பீட்டில் இந்த பிளாஸ்மா வங்கி அமைக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இதுவரை 26 நபர்களுக்கு சோதனைமுறையில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதில் 24 நபர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்மா தானம் வழங்கும் வழிமுறைகள்:

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் கொரோனா எதிர்மறை பரிசோதனை முடிவு வந்த 14 வது நாளிலிருந்து பிளாஸ்மா தானம் செய்யலாம், இவர்களுக்கு 18 முதல் 65 வயதுக்குள் இருக்கவேண்டும். உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் மற்றும் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை போன்ற நோய்கள் உள்ளவர்களால் பிளாஸ்மா தானம் செய்ய இயலாது. பிளாஸ்மா கொடையாளர்களிடம் இருந்து இரத்த கூறுகளை தனியாக பிரித்தெடுக்கும் கருவியின் மூலம் 500 மி.லி அளவு பிளாஸ்மா எடுக்கப்படும். தானமாக பெறப்பட்ட பிளாஸ்மாவை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் பாதுகாத்து ஓராண்டுவரை பயன்படுத்தலாம்.