இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்.), தொற்று நோய்ப் பிரிவுத் தலைவர் மருத்துவர் சமீரன் பாண்டா, இன்று தனது பேட்டியொன்றில் “செப்டம்பர் மற்றும் அக்டோபருக்கு இடையே எப்போது வேண்டுமானாலும் கொரோனா மூன்றாவது அலை தாக்கலாம்” எனக்கூறி எச்சரிந்தார்.
தனது அந்த பேட்டியில், அவர் பகிர்ந்திருந்த பிற தகவல்கள் இங்கே: “கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் அதிகரிக்க, நமக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறதா அல்லது மூன்று மாதங்கள் இருக்கிறதா என நம்மால் இப்போது கணிக்க முடியவில்லை. சில மாநிலங்களில் முன்கூட்டியே அறிகுறிகள் தெரியத் தொடங்குகின்றன (இதன் அடிப்படையில், மூன்றாவது அலை இந்தியா முழுமைக்கான பாதிப்பாக இருக்காது என சொல்லப்படுகிறது. அதாவது, தனிப்பட்ட மாநிலங்களுக்கான உயர்வாக மட்டும் 3-வது அலை இருக்கக்கூடும்).
குறிப்பாக விழாக்காலங்கள் வரும்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை. அப்படியான நேரத்தில் மக்கள் அதிகமாக கூடும்போது, அந்த இடமானது சூப்பர் ஸ்ப்ரெட்டராக மாறுவிடுகிறது. இப்படி கணிக்கமுடியாமல் சில இடங்களில் பாதிப்பு அதிகமாகிறது.
கடந்த இரண்டாவது அலையில் தீவிர பாதிப்பை எதிர்கொள்ளாத மாநிலங்கள், இம்முறை தங்களின் தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்திக்கொள்வது அவசியம்.
தொடர்புடைய செய்தி: 2வது அலையை காட்டிலும் 3ம் அலையின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் - ஐ.சி.எம்.ஆர்.
கேரளாவில் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக, அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படக்கூடிய நபர்களுடன் அதிகம் தொடர்பு கொள்கிறார்கள் என்பதே இருக்கிறது. அதேநேரம் கேரள அரசு, எந்தெந்த இடத்திலெல்லாம் கொரோனா அதிகம் பரவுகிறதென்ற தரவுகளை பொறுப்பாக பராமரிக்கிறது.
ஐ.சி.எம்.ஆர்.-ன் சீரோ சர்வே தரவுகளின்படி 6 - 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50%-த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனாவின் தாக்கம் உள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கான தடுப்பூசி விநியோகத்தின் தேவை இப்போது ஏற்படவில்லை. ஏனெனில் குழந்தைகள் தடுப்பூசியில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலில் பெரியவர்கள் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும். அதுவே முக்கியம். குறிப்பாக ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்” எனக்கூறியுள்ளார்.