கொரோனா வைரஸ்

"ரயிலில் ஏசி பயணிகளுக்கு கம்பளி கிடையாது" தெற்கு ரயில்வே

"ரயிலில் ஏசி பயணிகளுக்கு கம்பளி கிடையாது" தெற்கு ரயில்வே

jagadeesh

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஏசி ரயில் பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் அனைவருக்கும் கம்பளி தரப்படமாட்டாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக தெற்கு ரயில்வேயிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் "கொரோனா ஒரு நோய் தொற்று என்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ரயில்வே மேற்கொண்டு வருகிறது. ரயில் நிலையங்களில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஆடியோ , வீடியோக்கள் திரையிடப்படுகிறது. அதேபோல புறநகர் மின்சார ரயில் முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரை அடிக்கடி தூய்மைப்படுத்தப்படுகிறது. மேலும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ சோதனைகளும் நடத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த செய்திக் குறிப்பில், "இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு கம்பளி வழங்கப்படமாட்டாது. பயணிகள் யாருக்கேனும் தேவைப்பட்டால் மட்டுமே கம்பளிகள் வழங்கப்படும். ஆனால், பயணிகளுக்கு தலையணை, தலையணை உறை, பெட் ஷீட்டுகள் தொடர்ந்து வழங்கப்படும். பயணிகளுக்கு ஏதேனும் இதில் மாற்றம் அல்லது புதிதாக பெட் ஷீட்டுகள் தேவைப்பட்டால் எங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கலாம். ரயில்வே எடுக்கும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பயணிகள் ஒத்துழைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.