கொரோனா வைரஸ்

தமிழகத்தில் இன்று 40,000 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று 40,000 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்

Sinekadhara

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தினசரி தொற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகிவரும் நிலையில், தொடர்ந்து 3 நாட்களாக சற்றே அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை 40 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் முகாமில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் போலியோ சொட்டு மருந்து இடங்கள் என பல இடங்களில் மெகா முகாம் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை சுமார் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு மெகா முகாமை தமிழக அரசு நடத்துகிறது. சென்னையில் மட்டும் 1,600 முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக வாகனங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை வ.உ.சி. மைதானத்தில் தடுப்பூசி முகாமுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்டு செலுத்துவதற்காக தனித்தனி கவுண்டர்களும், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக தனித்தனி கவுண்டர்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சேலத்தில், தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டறியப்பட்டு, வீடுவீடாகச் சென்று, "சிலிப்" வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூவருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என காஞ்சிபுரம் நகராட்சி அறிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில், 420 கிராம ஊராட்சிகளிலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் தலா 5 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படும் கிராம ஊராட்சி தலைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கவும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.