கொரோனாவை எதிர்கொள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் ரூ.20,000 கோடியில் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் கேரளாவில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி, வறுமை ஒழிப்புத் திட்டமான குடும்பஸ்ரீ மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கடன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 மாதத்திற்கான நலத்திட்ட ஓய்வூதியத்தை இந்த மாதமே வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. நலத்திட்டம் ஓய்வூதியம் பெற தகுதியில்லாத குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க 1,320 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் வழங்க ரூ.100 கோடியும், 20 ரூபாய் மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக ரூ.50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதார திட்டத்திற்காக 500 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.14 ஆயிரம் கோடி கடன் நிலுவையை மாநில அரசு ஏப்ரல் மாதத்திற்குள் அடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ, டாக்ஸிகளுக்கு தகுதி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணங்களில் தளர்வு அளிக்கப்படும் எனவும், திரையரங்குகளுக்கு விதிக்கப்படும் பொழுதுபோக்கு வரி குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு வரி விலக்கு, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை செலுத்த கூடுதல் அவகாசம் போன்ற அறிவிப்புகளையும் கேரள அரசு வெளியிட்டுள்ளது.