கொரோனா வைரஸ்

அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரி ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி நிறுவனம் விண்ணப்பம்

அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரி ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி நிறுவனம் விண்ணப்பம்

நிவேதா ஜெகராஜா

அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்திருக்கும் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் விநியோகிக்கும் நோக்கத்தில், அவசரகால அனுமதி கோரி அந்நிறுவனம் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அளித்துள்ளது. இந்த ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி கோவிஷீல்ட் - கோவேக்சின் போல இரு டோஸாக இல்லாமல், ஒரே டோஸாக போட்டுக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசியாகும். முன்னதாக இதே நிறுவனம், கடந்த 2ம் தேதிதான் தங்கள் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவதற்கான இந்திய அரசிடம் அளித்திருந்த விண்ணப்பத்தை திருப்பி பெற்றிருந்தது. தற்போது இதே நிறுவனம் மீண்டும் அவசர கால அனுமதிக்கு விண்ணப்பித்திருக்கிறது.

ஆய்வக பரிசோதனை மேற்கொள்வதற்கான விண்ணப்பத்தை திரும்ப பெற்றதன் பின்னணி:

தங்கள் விண்ணப்பத்தை திரும்ப பெற்றதற்கு, ‘இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைக்க, ஆய்வக பரிசோதனைகள் தேவையில்லை என இந்திய மருத்துவக் கட்டுப்பாட்டு வாரியம் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆகவே பரிசோதனையை மேற்கொள்ளும்படி நாங்கள் அளித்த விண்ணப்பதை திரும்பப்பெறுகிறோம்’ என அந்நிறுவனத்தினர் கூறியிருந்தனர். இருப்பினும் “இந்திய மக்களுக்கு நாங்கள் ஒரு டோஸ் தடுப்பூசியையே விநியோகிக்கும் முடிவிலேயே இப்போதும் இருக்கிறோம். நிச்சயம் இங்கு விநியோகிப்போம்” என அந்நிறுவனம் கூறியிருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே இன்று இந்நிறுவனம் அவசர கால விண்ணப்பித்தை அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அவசர கால விண்ணப்பம்: ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி, ஒரே ஒரு டோஸில்தான் தரப்படும் என்றபோதிலும், இது 85% தீவிர கொரோனா பாதிப்பை தடுப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்தத் தடுப்பூசி எடுத்துக்கொள்வோருக்கு, கொரோனா உறுதியானாலும்கூட அவர்களுக்கு மேற்கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலும், கொரோனாவால் நேரும் இறப்புக்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக இன்று அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆக.5ம் தேதி, ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், தனது ஒரு டோஸ் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்க, இந்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளது.

எங்கள் தடுப்பூசியின் மீது செய்யப்பட்ட மூன்றாம் கட்ட ஆய்வக ஆய்வின் முடிவில் தெரியவந்த தகவலின்படி, இந்த தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு, 85% தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது என உறுதியாகியுள்ளது. அதேபோல தடுப்பூசி எடுத்துக்கொண்டு 28 நாள்களுக்குப் பின்னர் அவர்களுக்கு கொரோனா ஏற்பட்டால், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டிய நிலையும் -இறக்கும் சூழலும் தடுக்கப்படுவதும் தெரியவந்துள்ளது. இவற்றை அடிப்படையாக வைத்தே அவசர கால அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளோம்.

உலகளாவிய ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி விநியோகத்துக்கு, பயாலஜிக்கல்-இ நிறுவனம் முக்கியமான பங்குவகிக்கும். எங்களுக்கு இருக்கும் அரசு, சுகாதாரத்துறை மற்றும் GAVI - COVAX போன்ற நிறுவனங்கள் ஆகியோரின் தொடர்புகளுடன், பயாலஜிக்கல்-இ நிறுவனமும் இணைந்துக் கொள்ளும். இணைந்து, உலகளாவிய விநியோகத்துக்கு அவை உதவும்.

கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வர, இந்திய அரசுக்கு எங்களின் உதவி எந்தளவுக்கு தேவைப்படுகிறது என்பதை அறிவதற்கு காத்திருக்கிறோம். பயாலஜிக்கல்-இ லிமிட்டட் நிறுவனத்துடன் இணைந்து நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் தடுப்பூசி விநியோகத்துக்கு, இந்த அவசர கால அனுமதி ஒரு மைல்கல்லாக இருந்து பாதை வகுக்கும் என நம்புகிறோம்” எனக்கூறியுள்ளனர்.

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி, டெல்டா வகை கொரோனா திரிபுக்கு எதிராகவும் உறுதியாக செயல்படுவதாக அந்நிறுவனம் கருத்துகளை முன்வைத்துள்ளது.